விஷ்ணு தீபத்தையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:
விஷ்ணு தீபத்தையொட்டி தர்மபுரியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
விஷ்ணு தீபம்
கார்த்திகை தீபத் திருவிழாவின் 2-வது நாளான நேற்று விஷ்ணு தீபத்தையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இரவு சாமி திருவீதி உலா நடைபெற்றது. மேளதாளத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், அக்கமனஅள்ளி ஆதிமூல பெருமாள் கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.