வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வைகண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் விடிய விடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்.

அதன்படி தர்மபுரியில் பிரசித்தி பெற்ற கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு லட்டு பிரசாத குழு சார்பில் 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்து சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் சார்பில் அதிகாலை முதல் இரவு வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சென்னகேச பெருமாள் கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில், இலக்கியம்பட்டி கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், அதியமான் கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், லலிகம் சென்றாய சாமி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை மறுநாள் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Next Story