ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

ஆருத்ரா தரிசனத்தையொட்டி அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும், சாமிக்கு மகா தீபாராதனை மற்றும் உபகார பூஜைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை சாமிக்கு பால், பன்னீர், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும், உபகார பூஜைகளும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

ஆனந்த நடராஜர்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜருக்கு அதிகாலை முதல் பால், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பல்வேறு வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமி ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் மற்றும் சிவசுப்பிரமணிய சாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தகிரீஸ்வரர் கோவில்

கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவில், சவுளுப்பட்டியில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய ஆதிலிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் சிவன் கோவில், பழைய தர்மபுரி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் காவிரி அம்மன் உடனாகிய தேசநாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story