சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சி
சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சி அளித்ததை பார்க்க பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு
உடுமலையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவ்வையாரால் அகத்தியரிடம் அறிமுகம் பெற்ற வாய் பேச முடியாத ராமதேவன் என்ற சிறுவன் அகத்தியரின் சீடரானார். தன் சமயோசித புத்தியால் காசிவர்மன் என்ற மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை வெளியேற்றியதால் அவர் தேரையர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அகத்திய முனிவரால் பேசும் திறன் பெற்று நீண்ட காலம் மருத்துவ சேவை செய்து தேரை சித்தர் என்று பெயர் பெற்று, பொதிகை சார்ந்த தோரணமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடுமலை குட்டை திடலில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர், தேரை வடிவில் காட்சியளிப்பதாகவும், அவரை தரிசித்தால் நோய்கள் தீரும் என்றும் தகவல் பரவியது. அந்த கோவிலில் உள்ள முருகன் சிலையின் வேலுக்கு இடையில் நீண்ட நேரமாக அந்த தேரை அசையாமல் அமர்ந்திருந்தது. இவ்வாறு தேரை சித்தர் அவ்வப்போது காட்சியளிப்பதாகவும் திடீரென்று மாயமாக மறைந்து விடுவதாகவும் கூறி பக்தர்கள் வழிபட்டனர். விஞ்ஞானம் வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் சில நம்பிக்கைகள் மனிதர்களின் பல நோய்களுக்கு தீர்வாக இருப்பது வியப்புக்குரிய விஷயமாகும்.