உடுமலை மாரியம்மன் கோவில் தேரை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம்


உடுமலை மாரியம்மன் கோவில் தேரை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம்
x

உடுமலை மாரியம்மன் கோவில் தேரை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

திருப்பூர்

உடுமலை மாரியம்மன் கோவில் தேரை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

தேர்த்திருவிழா

உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தேருக்கு பதிலாக இந்த ஆண்டு இலுப்பை மற்றும் தேக்கு மரத்தை கொண்டு புதிய தேர் செய்யப்பட்டது. அதில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்றுச் சிற்பங்கள் விஷ்ணு, முருகர், விநாயகர் உள்ளிட்ட 220 மரசிற்பங்கள் 120 பொதியல் சிற்பங்கள் அடங்கிய எண்கோண வடிவில் புதிய பரிமாணத்தில் காட்சியளித்த தேர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

புதிய தேர்

ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட இந்த புதிய தேரானது 12 அடி உயரத்தில் 5 நிலைகளைக் கொண்டதாகவும் சுவாமிகள் எழுந்தருளும் சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டு இருந்தது. தேரில் எழுந்தருளிய மாரியம்மன், சூலத்தேவரையும் பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழாவும் நிறைவடைந்தது.

ஆனால் 15 நாட்கள் கடந்தும் தேரை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாப்பதற்கு உண்டான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் தேர் சேதமடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இது குறித்து சமூக அலுவலர்கள் கூறியதாவது:-

இயற்கை சீற்றங்களால் பாதிப்பு

நூறு ஆண்டுகள் கடந்த பழைய தேருக்கு பதிலாக இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய தேர் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தேரோட்டம் முடிந்து இன்று வரையிலும் அதை முழுமையாக பாதுகாத்து பராமரிப்பதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேர் மழை, வெயில், காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்படையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

உடுமலையின் வரலாற்றையும் காவல் தெய்வமான அம்மனையும் சூலத்தேவரையும் தாங்கி நிற்கும் தேர் தூசு படிந்த நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. பழைய தேர் இருந்த போது விழா நிறைவடைந்து ஓரிரு நாட்களில் இரும்பு தகரத்தில் செய்யப்பட்ட கூடு போட்டு மூடி பாதுகாப்பு செய்து விடுவார்கள். கோவில் வளாகத்திலேயே இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயலர் அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள் தேர் நிலையை கடந்து தான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. தேரை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே கோவில் தேரை முறையாக பாதுகாப்பதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். இத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story