ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு திருவிழா-பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்


ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு திருவிழா-பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு திருவிழா தொடங்கியது. பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோட்டை மாரியம்மன்

ஓசூரில் ஒவ்வொரு ஆண்டும் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 25-ந் தேதி கோவிலில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழா நாளான நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

பெண்கள் பால் குடம், மாவிளக்கு ஏந்தியவாறும் ஊர்வலமாக சென்றும் அம்மனுக்கு பூஜைகள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள், தங்கள் முதுகு, கன்னம் ஆகிய பகுதிகளில் அலகு குத்தியவாறும், அந்தரத்தில் தொங்கியவாறும் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

போக்குவரத்து மாற்றம்

விழாவையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரின் முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாவிளக்கு திருவிழாவை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) இரவு பூ மிதித்தல், உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.


Next Story