முடி திருத்தும் தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் எழுத்தர் கைது


முடி திருத்தும் தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் எழுத்தர் கைது
x

பெரம்பலூரில் கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் சலூன் கடை நடத்த உரிமம் வழங்குவதற்காக முடி திருத்தும் தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் எழுத்தரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

கோவில் இடத்தில் கடை

பெரம்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 45). இவர் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் எதிரே உள்ள கட்டிடத்தில் முடி திருத்தும் கடையை (சலூன்) பல ஆண்டுகளாக வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சலூன் கடையை தொடர்ந்து நடத்துவதற்கு உரிமம் பெற சிங்காரத்திடம் அக்கோவில் எழுத்தரான பெரம்பலூர் மேட்டு தெருவில் வசித்து வரும் ரவி(58) என்பவர் லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம்

லஞ்சம் கொடுக்க விரும்பாத சிங்காரம் இதுகுறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை சிங்காரத்திடம் கொடுத்து, இதனை கோவில் எழுத்தர் ரவியிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி சிங்காரம் நேற்று மதியம் 2 மணியளவில் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமாசித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்காரம் லஞ்ச பணத்தை அலுவலகத்தில் பணியில் இருந்த கோவில் எழுத்தர் ரவியிடம் கொடுத்தார்.

கைது

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று ரவியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரவியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டதாக தெரிகிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து சலூன் கடையை நடத்துவதற்கு லஞ்சம் வாங்கிய கோவில் எழுத்தர் கைதான சம்பவம் கோவில் அலுவலர்கள், ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

பணி நிரந்தரம் ஆகி 4 மாதம்

கைதான ரவியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதி ஆகும். மேலும் அவர் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலில் தற்காலிக எழுத்தராக பணியில் சேர்ந்தார். அவருக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் பணி நிரந்தரம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story