மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு


மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x

மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர்

மன்னார்குடி ஏழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏழை மாரியம்மன் கோவில்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளிட்ட ஏராளமான பிரசித்திப்பெற்ற கோவில்கள் உள்ளன. செண்பகாரண்ய ஷேத்திரம் என்றும் தெட்சிண துவாரகை என போற்றி வழங்கப்படும் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவிலுக்கு வடமேற்கு பகுதியில் உள்ள கணக்கன் தெருவில் பிரசித்திப்பெற்ற ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஏழை மாரியம்மன், விநாயகர், முருகன், துர்க்கை மற்றும் பரிவார தெய்வங்களுடன் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் அம்மனுக்கு ஆவணி மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல சித்திரை திருவிழாவையொட்டி முதல் வெள்ளிக்கிழமை சுமங்கலி பூஜை விமரிசையாக நடைபெறும்.

வேப்பிலை பிரசாதம்

இதில் கடைசி வெள்ளியன்று பால்குடம், காவடி, சக்தி கரகம் எடுத்து அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு இக்கோவிலில் வேப்பிலை பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை சாப்பிட்டு குழந்தைபேறு பெற்றவர்கள் ஏராளம் என பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட ஏழைமாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டு நகரசபை முன்னாள் உறுப்பினர் ராசுப்பிள்ளை தலைமையில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தன.

குடமுழுக்கு

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அதன்படி யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 20-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதன் முடிவில் புனித நீர் நிரப்பப்பட்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

அதைத்தொடர்ந்து ஏழை மாரியம்மன் சன்னதி, பரிவார தெய்வங்களான பாலவிநாயகர், பாலமுருகன், விஷ்ணு, துர்க்கை, நாகம்மாள் ஆகிய பரிவார தெய்வ சன்னதிகளின் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

ஏற்பாடுகள்

இதில் மன்னார்குடி மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார சன்னதிகளில் தீபாராதனை நடந்தது. குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் எஸ்.ராசுபிள்ளை, செயலாளர் எஸ்.கேசவன், பொருளாளர் கே.பாலமுருகன், நிர்வாகிகள் ஜெ.கருணாநிதி, எஸ்.அன்புசங்கர், நகரசபை 14-வது வார்டு உறுப்பினர் ஸ்ரீதர், திருப்பணி பொறியாளர் தண்டபாணி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


Next Story