கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சுசீந்திரம்:
குமரி மாவட்ட திருக்கோவில் பணியாளர்களுக்கு ஐகோர்ட்டு ஆணைப்படி உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளருக்கு பணிக்கொடை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். பணியில் இருக்கும்போது மறைந்த பணியாளருடைய வாரிசு தாரர்களுக்கு தகுதி அடிப்படையில் நிர்வாகத்தில் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட இணை ஆணையர் அலுவலகம் முன்பு கோவில் ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஊழியர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் தங்கமோகன், செல்லசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கோவில் ஊழியர் சங்க உதவி தலைவர் வல்சகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் பெனட் ஜோஸ், மாதர் சங்கத் தலைவி உஷா பாசி ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் நிறைவுரையாற்றினார். முடிவில் ஆலய ஊழியர் சங்க செயலாளர் அஜித் குமார் நன்றி கூறினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை மனுவாக எழுதி குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியனிடம் கொடுத்தனர். அவர் கோவில் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.