வைத்தீஸ்வரன்கோவில் ஏழைகாத்த அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா


வைத்தீஸ்வரன்கோவில் ஏழைகாத்த அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
x

வைத்தீஸ்வரன்கோவில் ஏழைகாத்த அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன்கோவில் ஏழைகாத்த அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏழைகாத்த அம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கள்ளத்தெருவில் உள்ள ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலத்தை கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் தொடங்கி வைத்தார். பின்னர் சாமி சன்னதி, மேலவீதி, மயிலாடுதுறை சாலை வழியாக சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் ஊர்வலம் கதிராமங்கலம் காவிரி ஆற்றை வந்து அடைந்தது.

பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த முளைப்பாரியை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருக்கடையூர்

திருக்கடையூர் ஓடக்கரையில் கல்கத்தா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தை முன்னிட்டு மயான சூரை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று மயான சூரை நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு அபிஷேக ஆராதனையும், கரகம் புறப்பாடு நடந்தது. அப்போது பக்தர்கள் காளி வேடம் அணிந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கல்கத்தாகாளி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு மயான சூரை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையார் போலீசார் செய்திருந்தனர்.


Next Story