செங்குறிச்சி பகவதியம்மன் கோவில் திருவிழா; கழுமரம் ஏறிய இளைஞர்கள்


செங்குறிச்சி பகவதியம்மன் கோவில் திருவிழா; கழுமரம் ஏறிய இளைஞர்கள்
x

செங்குறிச்சியில் பகவதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இளைஞர்கள் போட்டிபோட்டு கழுமரம் ஏறினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த செங்குறிச்சியில் பகவதியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கரையம்மன், மலையம்மன் கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் கடந்த மாதம் 29-ந்தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன், திருவிழா தொடங்கியது. இதையடுத்து திருவிழாவில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. அதன்படி, அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது. இதற்காக 60 அடி உயர கொண்ட மர கம்பு கொண்டு வரப்பட்டது. பின்னர் அதன்மீது வழுக்கும் தன்மையுள்ள விளக்கெண்ணெய், கேப்பை ஆகியவை தடவப்பட்டு கோவில் முன்பு உள்ள மந்தையில் ஊன்றப்பட்டது. அதில் இளைஞர்கள், பொதுமக்களின் ஆரவாரத்துடன் போட்டி போட்டு ஏறினர். முடிவில் கழுமரம் ஏறிய இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயன், லலிதா, செங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், துணைத்தலைவர் கலாராணி, பரம்பரை அறங்காவலர்கள் விஜயகுமார், சுந்தரவடிவேல்ராஜா மற்றும் திண்டுக்கல், நத்தம், வடமதுரை, கம்பிளியம்பட்டி, வி.எஸ்.கோட்டை, செந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story