கோவில் திருவிழா
கடையம் கோவில் திருவிழாவில் முப்பிடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் தேர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு கடையத்தில் அமைந்துள்ள முப்பிடாதி அம்மன், கீழ கடையத்தில் பதினெட்டுபட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கால் நாட்டுடன் தொடங்கி நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு சமூகத்தினர் சார்பில், மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் திருவிழா அன்று அம்மன் தேரோட்டம் நடந்தது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் முப்புடாதி அம்மன் சிறப்பு ஆராதனைக்கு பின்பு தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை ரத வீதி வழியாக இழுத்து வந்தனர்.
இதேபோல் கீழ கடையம் பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. அம்பாள் தேருக்கு எழுந்தருளி மூல கோவிலான கடையம் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்றது.
முன்னதாக தெற்கு கடையம் விநாயகர் கோவில் முன்பு முப்பிடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் சந்திப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.