பழனி பங்குனி உத்திர திருவிழாவில் நாளை திருக்கல்யாணம்
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நாளை நடைபெறுகிறது.
திருக்கல்யாணம்
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
முன்னதாக அன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
16 வகை அபிஷேகம்
அப்போது முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5.45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளித்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.
தேரோட்டம்
பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.
அலைமோதும் பக்தர்கள்
இந்தநிலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வர தொடங்கியுள்ளனர். மயில் காவடி எடுத்து பக்தர்கள் ஆடி வருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கிரிவீதிகளில் மேள, தாளத்துடன் ஆடிப்பாடி உலா வருகிறார்கள். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று தீர்த்த அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில் பழனியில் கடும் வெயில் நிலவுவதால் மதிய நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.