சக்தி காளியம்மன்-மாரியம்மன் கோவில் திருவிழா
மேட்டூரில் சக்தி காளியம்மன்-மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
மேட்டூர்
மேட்டூர் பழைய மார்க்கெட்டில் சக்தி காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி இரவு சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக கடந்த 5-ந் தேதி காலையில் காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல், பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கருவறைக்குள் சென்று தாங்களாகவே அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலையில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் அக்னி கரகம், மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் மற்றும் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடும் நடந்தன. இரவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குப்புசாமி தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டினர் செய்திருந்தனர்.