கூடலூர் செல்வ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
கூடலூரில் உள்ள செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
கூடலூர் முனியாண்டி கோவில்தெருவில் செல்வமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கிராம சாவடியில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் நடுத்தெரு, பூக்கடை வீதி வழியாக வடக்கு காணியம்மன் கோவிலுக்கு சென்றது.
அங்கு கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அலகு குத்தப்பட்டது. மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். அதன்பிறகு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள், கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.