திருமங்கலம் அருகே கோவில் விழா: ஆடுகளை பலியிட்டு ஆண்களுக்கு கறிவிருந்து
திருமங்கலம் அருகே நடந்த கோவில் விழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து நடந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே நடந்த கோவில் விழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆடுகளை பலியிட்டு கறிவிருந்து நடந்தது.
பாரம்பரிய திருவிழா
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமத்தில் காவல் தெய்வமாக எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா, பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் ஆடுகள் வயல் மற்றும் விளைநிலங்களில் இரை தேடிச்செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். எல்லை அம்மன் வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்தை வேண்டி நேர்த்திக்கடனாக ஆடுகளை வழங்குகிறார்கள்.
நேர்த்திக்கடன்
எல்லையம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் அம்மனுக்கு பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டது. 50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. பின்னர் கறி விருந்து நடந்தது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். நேற்று நடந்த கறி விருந்தில் திருமங்கலம், மேல உரப்பனூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவை சாதி, மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கமாகவும் கொண்டாடுகிறார்கள்.