சாலியமங்கலத்தில், திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை


சாலியமங்கலத்தில், திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை
x

தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

திருவள்ளுவர்

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர் திருவள்ளுவர். இவர் இயற்றிய திருக்குறள் இன்றளவும் உலகம் போற்றும் இலக்கியமாகும். உலகத்துக்கெல்லாம் பொதுமறை என திருக்குறளை அழைக்கிறார்கள். திருக்குறளில் உள்ள கருத்துகள் உலகம் முழுவதும் வாழும் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் தத்துவமாக திகழ்வது திருக்குறளின் சிறப்பாகும்.

திருவள்ளுவருக்குரிய கோவிலை காண்பது அரிதாகும். இந்த நிலையில் தஞ்சை அருகே சாலியமங்கலம் பகுதியில் திருவள்ளுவர் தெருவில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு மடம் ஒன்றை கிராமமக்கள் அமைத்து உள்ளனர். அங்கு திருவள்ளுவருடைய உருவப்படத்தை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.

கோவில் கட்ட முடிவு

மேலும் திருவள்ளுவருக்கு அங்கு கோவில் கட்டவும் முடிவு செய்தனர். அதன்படி அங்கு புதிதாக பெரிய அளவிலான கோவில் ஒன்றை கிராமமக்கள் கட்டி வருகின்றனர். தற்போது கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்து விரைவில் திருவள்ளுவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளுவர் கோவில் கருவறையில் வைப்பதற்கான மூலவர் சிலை மற்றும் உற்சவர் சிலை ஆகியவற்றை கோவிலில் பிரதீஷ்டை செய்ய கிராமமக்கள் முடிவு செய்தனர். அதன்படி 2½ அடி உயரம் உள்ள ஐம்பொன் திருவள்ளுவர் சிலை மற்றும் 4 அடி உயரமுள்ள கற்சிலை ஆகியவற்றை கும்பகோணம் அருகே உள்ள பஞ்சலோக சிற்ப கூடத்தில் தயார் செய்து கிராமத்துக்கு கொண்டு வந்தனர்.

சிலைகள் ஊர்வலம்

பின்னர் சிலைகளை அலங்கார வாகனத்தில் வைத்து மேள, தாள வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன், சாலியமங்கலத்தில் பல்வேறு வீதிகள் வழியாக கிராமமக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து கோவிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story