நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

நத்தம் மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

நத்தம் மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. அன்றையதினம் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, தனபூஜைகள் ஆகியவை நடந்தது. 3-ந்தேதி கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடந்தது.

4-ந்தேதி காலை உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலையில் இருந்து பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தன கருப்பு சாமி கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குடங்களை சுமந்தபடியும், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

யாககால பூஜை

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதன் பின்னர் வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. 5-ந்தேதி காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. விழாவின் 6-ம் நாளான நேற்று 4, 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

7-ம் நாளான இன்று காலையில் 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கரந்தமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள், காசி, ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோவில் ஆகிய புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஆகியவை கோவில் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அமைச்சர்கள் பங்கேற்பு

பின்னர் காலை 11.35 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது அங்கு வந்த கருடன் கோபுரத்தை சுற்றி வானில் வட்டமிட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் அம்மனை வேண்டி வழிபாடு நடத்தினர்.

கும்பாபிஷேக விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து அமைச்சர்கள் மீதும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்துகொண்டவர்கள்

இந்த விழாவில் திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் விசாகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, அறநிலையத்துறை இணை கமிஷனர் பாரதி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிசாமி, தர்மராஜன், மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் நத்தம் நகர செயலாளர் ராஜ்மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், மாவட்ட கவுன்சிலர் லலிதா, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, ஒன்றிய ஆணையாளர் முனியாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார், வேம்பார்பட்டி ஊராட்சி தலைவர் கந்தசாமி, அஞ்சுகுளிப்பட்டி ஊராட்சி தலைவர் தேவிராஜாசீனிவாசன், ஏழுமலையான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பரமானந்தம், அரவிந்தன், கோபால்பட்டி அரசு நகை ஏலதாரர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே நேற்று இரவு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது அவர், கோவிலில் தரிசனம் செய்தார்.


Related Tags :
Next Story