மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
விஷ்ணுபுரம் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குடவாசல்;
குடவாசல் அருகே விஷ்ணுபுரத்தில் மகாமாரியம்மன், மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி, செடில் திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக கோவில் சிவாச்சாரியார் வடக்குடி மாலி, அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அம்மன் வீதி உலா நடந்தது. இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் செய்திருந்தனர்.