கோவிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் மீட்பு


கோவிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் மீட்பு
x

கும்பகோணம் அருகே கோவிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே கோவிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மல்லுகத்தெரு பகுதியில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 3.26 ஏக்கர் இடம் பேட்டை சாலைக்காரத்தெருவில் உள்ளது.இந்த இடத்தை சிலர் சுமார் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்து குடியிருப்புகள், கடைகள் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா தலைமையில், தாசில்தார் வெங்கடேசன், தனி தாசில்தார் முருகவேல், துணை தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை சென்றனர்.

வாக்குவாதம்

அப்போது அங்கிருந்த சிலர் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீட்பு

பேச்சுவார்த்தையில் காலியாக உள்ள இடம் மட்டும் தற்போது மீட்கப்படும். மீதி உள்ள இடங்களுக்குரிய பட்டா மற்றும் உரிய ஆவணங்களை உரிமையாளர்கள் காண்பிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து சந்தானகோபாலகிருஷ்ணன் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் 30 சென்ட் காலி இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.


Next Story