புதுக்கோட்டையில் கோவில்கள் நடை மூடப்பட்டது


சூரியகிரகணத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்கள் நடை மூடப்பட்டது.

புதுக்கோட்டை

சூரியகிரகணம் பார்த்த மக்கள்

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது சூரியனை நிலவு மறைப்பதுதான் சூரியகிரகணம். இந்த கிரகணம் தமிழகத்தில் மாலை 5 மணி 13 நிமிடத்தில் தொடங்கி மாலை 6 மணி 25 நிமிடத்தில் முடிவடைகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செஸ்டாட்ஸ் அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற வானியல் நிகழ்வான பகுதி சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் கிரகணத்தை பார்க்கக்கூடிய சூரியக் கண்ணாடி மற்றும் இணையதள செயலி மூலமாக விளக்கினர். நடைபயிற்சியில் ஈடுபட்டோர், பயிற்சி மாணவர்கள், அறிவியல் இயக்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதிக மேக மூட்டம் இருந்ததால் முழுமையாக சூரிய கிரகணத்தை காணமுடியவில்லை. இருப்பினும் மாலை 5.30 மணிக்கு சுமார் 3 நிமிடங்கள் காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், செஸ்டாட்ஸ் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாவட்டத்தலைவர் வீரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோவில் மூடப்பட்டது

இந்த சூரியகிரகணத்தை முன்னிட்டு சிலர் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. பெண்கள் சமைப்பதை நிறுத்தினர். புதுக்கோட்டையில் உள்ள கோவில்கள் மூடப்பட்டிருந்தது.

மேலும் சூரியகிரணத்தை முன்னிட்டு மூடப்பட்ட கோவில்கள் மீண்டும் இரவு 7 மணிக்கு திறப்பதாக அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது.

பின்னர் ேகாவிலில் பூஜைகள் நடைபெற்றது. கிரகணம் முடிந்தபின்பு சிலர் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் உணவு உட்கொண்டனர்.


Next Story