பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் தொடக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி பாதுகாப்பு 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி பாதுகாப்பு 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா தெரிவித்தார்.
தற்காலிக பஸ் நிலையங்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சி மன்னார்புரம் மற்றும் சோனா மீனா தியேட்டர் ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போக்குவரத்துத்துறை சார்பில் திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 120 பஸ்கள் இயக்கப்படுகிறது.
மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 406 பஸ்களும், புதுக்கோட்டைக்கு 369 பஸ்களும், சோனா மீனா தியேட்டர் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து 492 பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகருக்குள் 200 பஸ்கள் சுழற்சி முறையில் இயக்கப்படுகிறது.
டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அறிவுரை
மன்னார்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை, புதுக்கோட்டை, போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இது 17-ந் தேதி வரை செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட தங்கள் ஊர்களுக்கு செல்லவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் கூடுதல் பணி நிமித்தமாக மன அழுத்தம் ஏற்படலாம். அதே நேரத்தில் அவர்கள் ஓய்வும் எடுத்து பாதுகாப்புடன் பஸ்களை இயக்க வேண்டும். பயணிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் பாதுகாப்பு பணியில் கூடுதலாக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளது. அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாகன போக்குவரத்தில் விதி மீறலில் ஈடுபடுகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.