ரூ.2½ லட்சத்தில் தற்காலிக இரும்பு பாலம்
மங்குழி ஆற்றின் குறுக்கே ரூ.2½ லட்சத்தில் தற்காலிக இரும்பு பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்
மங்குழி ஆற்றின் குறுக்கே ரூ.2½ லட்சத்தில் தற்காலிக இரும்பு பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மழையால் உடைந்தது
கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. கடந்த 11-ந் தேதி பெய்த மழையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கூடலூர் மங்குழி ஆற்றின் குறுக்கே இருந்த பழமையான சிமெண்டு பாலம் திடீரென உடைந்து ஆற்றில் விழுந்தது. அப்போது பாலத்தின் மீது நின்று கொண்டு ஆற்றில் தண்ணீர் வருவதை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களில் சிலர் தவறி ஆற்றுக்குள் விழுந்தனர்.
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக ஆற்றின் கரையோரம் ஏறி உயிர் தப்பினர். தொடர்ந்து வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மங்குழி பகுதி மக்கள் கூடலூர் நகருக்குள் வருவதற்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாலம் உடைந்த ஆற்றின் குறுக்கே புதியதாக சிமெண்டு பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும் கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
தற்காலிகமாக...
இதைத்தொடர்ந்து ரூ.2½ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் நேற்று மங்குழி ஆற்றின் குறுக்கே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை நகராட்சி தலைவர் பரிமளா, ஆணையாளர் காந்திராஜ், துணைத்தலைவர் சிவராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர். இருப்பினும் புதிய சிமெண்டு பாலம் கட்டுவதற்கான பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிய பாலம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சிமெண்டு பாலம் உடைந்து விட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது தற்காலிக பாலம் அமைத்தாலும், ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்கு மட்டுமே உதவும். வாகன போக்குவரத்துக்கு பயன்படாது. எனவே விரைவாக புதிய பாலம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.