உரங்கள் விற்கும்போது விவசாயிகளிடம் வேறு பொருட்களை வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை


உரங்கள் விற்கும்போது விவசாயிகளிடம் வேறு பொருட்களை வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை-  தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம் வேறு பொருட்களை வாங்க வற்புறுத்தினால் உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தென்காசி

உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம் வேறு பொருட்களை வாங்க வற்புறுத்தினால் உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சாகுபடி

தென்காசி மாவட்டத்தில் பிசானம் பருவ நெல் மற்றும் ரபி பருவ பயிர்கள் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 29 ஆயிரம் ஹெக்டேர் நெல், 16 ஆயிரத்து 85 ஹெக்டேர் சிறு தானியங்கள், 34 ஆயிரத்து 700 ஹெக்டேர் பயிறு வகை, 3,400 ஹெக்டேர் பருத்தி, ஆயிரம் ஹெக்டேர் கரும்பு, 1,960 ஹெக்டேர் எண்ணை வித்து பயிர்கள் மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு தேவையான உரங்கள் அனைத்தும் சரியான நேரத்தில், போதிய அளவில் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரங்கள் இருப்பு

தற்போது தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 1,902 மெட்ரிக் டன் யூரியா, 1,234 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 478 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3,905 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 323 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பு உள்ளன.

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 315 மெட்ரிக் டன் யூரியாவும், 372 மெட்ரிக் டன் டி.ஏ.பி.யும், 170 மெட்ரிக் டன் பொட்டாஷ், 70 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட், 767 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு உள்ளன.

பதுக்கல் கூடாது

உர விற்பனையாளர்கள் அனைவரும் விவசாயிகளின் தேவைக்கு போதிய உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கும் மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உரங்கள் பதுக்கல் செய்யக்கூடாது. விவசாயம் அல்லாத தேவைகளுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் பெற்று விற்பனை முனைய கருவியில் பில் போட்டு மட்டுமே மானியத்தில் வரும் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

அனைத்து உர விற்பனையாளர்களும் தினமும் அன்றைய தினத்தின் ஆரம்ப இருப்பு மற்றும் விற்பனை விலை ஆகியவற்றை கடைக்கு வரும் அனைவருக்கும் தெரியும்படியாக தகவல் பலகையில் எழுதி வைத்திருக்க வேண்டும்.

வேறு பொருட்கள்

உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம் வேறு பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க செய்யக்கூடாது. மீறினால் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உரங்கள் இருப்பு விற்பனை மற்றும் விதி மீறல்கள் தொடர்பான புகார் ஏதும் இருந்தால் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295430 என்ற எண்ணில் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது வேளாண்மை துறை அலுவலர்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story