தென்காசி கடத்தல் வழக்கு: குருத்திகாவை நாளை ஆஜர்படுத்த வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடத்தல் வழக்கில் குருத்திகாவை நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்று அவரது உறவினர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கடத்தல் வழக்கில் குருத்திகாவை நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்று அவரது உறவினர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கடத்தல் வழக்கு
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் வினீத் மாரியப்பன். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்பவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். அதனால் வினீத்தின் வீட்டில் குருத்திகா வசித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது பெற்றோர் அளித்த புகார் மீதான விசாரணை குற்றாலம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
இந்த விசாரணைக்காக வினீத்-குருத்திகா இருவரும் போலீசில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பினர். அப்போது, குருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலர் சேர்ந்து வினீத்தை தாக்கிவிட்டு குருத்திகாவை கடத்தி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வினீத் அளித்த புகாரின்பேரில் போலீசார் 12 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சிலர் கைதானார்கள். சிலர் தலைமறைவாக உள்ளனர். இதற்கிடையே குருத்திகாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வினீத் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
உறவினர்களுடன் செல்ல அனுமதி
அந்த வழக்கில் குருத்திகாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது குருத்திகா, தனது உறவினர்களுடன் செல்ல விரும்புவதாகவும், வினீத்துடன் தனக்கு எந்தவிதமான உறவும் இல்லை என தெரிவித்தார். அதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, குருத்திகா மேஜர் என்பதால் அவரது விருப்பப்படி செல்ல அனுமதித்து உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் தனது சித்தப்பாவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தநிலையில் குருத்திகாவை கடத்திய வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அவரது உறவினர்கள் விஷால் என்ற விஷால் போகர், கிருத்திகுமார் படேல், ராசு என்ற சண்முகராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
குருத்திகாவை ஆஜர்படுத்துங்கள்
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர்கள் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, இந்த வழக்கில் பல்வேறு விளக்கங்களை பெற வேண்டியுள்ளது. எனவே இந்த கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குருத்திகாவை வருகிற 12-ந்தேதி(அதாவது நாளை) மனுதாரர்கள் தரப்பினர் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, அன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.