ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்
திருப்பத்தூர் ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
வெற்றிவேல் முருகன் கோவில்
திருப்பத்தூர் அருகே ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் சிவலிங்க வடிவில் வள்ளி தெய்வ சேனா சமேத வெற்றிவேல் முருகன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் 55-வது ஆடி கிருத்திகை பெருவிழா நிகழ்ச்சி கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று ஆடி கிருத்திகையையொட்டி சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகர் அருள்பாலித்தார்.
விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஏராளமான பக்தர்கள் புஷ்பம், பால் காவடிகள் எடுத்தும் முருகன் படத்தை வைத்து சிறிய மற்றும் பெரிய தேர்களை அலகு குத்தி இழுத்து வந்தனர், மேலும் 25அடி முதல் 5, அடி வரை உள்ள வெள்ளி வேல் அலகு குத்தியும், அந்தரத்தில் தொங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர் மழை காரணமாக ஜலகாம்பறை நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் பக்தர்களுக்கு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போக்குவரத்து பாதிப்பு
ஆடிக்கிருத்திகையையொட்டி பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலால் கோவில் அருகே பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் அவதிப்பட்டனர்.
இதேபோன்று கொரட்டி கிராமத்தில் உள்ள காலத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சண்முக பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார், பசலிக்குட்டை சுப்பிரமணியசாமி திருக்கோவில் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.