அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்குகள் முடித்துவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்குகள் முடித்துவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்களை அறநிலையத்துறை நியமித்து வருகிறது. இந்த நியமனங்களை எதிர்த்தும், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை கொண்டுவந்துள்ள விதிகளை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அறங்காவலர்கள் உள்ள கோவில்களில் அவர்கள் மூலமாகவே இந்த நியமனங்கள் நடைபெற்றுவருகின்றன. அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகின்றனர்' என்று விளக்கம் அளித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைக்கிறோம். இந்த நியமனங்களால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம். அதேசமயம் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.