கூட்டுறவு சங்க பெண் அதிகாரி பணியிடை நீக்கம்


கூட்டுறவு சங்க பெண் அதிகாரி பணியிடை நீக்கம்
x

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கூறினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய பிரநிதிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாயிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் அரவிந்த் விவசாயிகள் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கடன் வழங்கியதில் முறைகேடு

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் குறுவை தொகுப்பை குமரி மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சிப்பாறையில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். வீரநாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி அம்பிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரி பணியிடை நீக்கம்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறுகையில்:-

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நெல் குறுவை தொகுப்பு திட்டமானது நடப்பாண்டில் டெல்டா அல்லாத சில மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தும் போது வேளாண் இடு பொருள்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவம் மையம் தற்போது செயல்பட்டு வருகிறது. தேனீ ஆராய்சி மையம் அமைப்பதற்கான திட்டம் இல்லை.

குமரி மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. வீரநாராயணசேரி தொடக்க வேளாண்மை சங்கத்தில் கடன் வழங்கியது தொடர்பாக பெண் அதிகாரி மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளதால் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.எம்.கிசான் திட்டத்தில்...

கனிம வளங்கள் கடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறும் விவசாயிகள், தற்போது மீண்டும் அந்த திட்டத்தை தொடர புதுப்பிக்க வேண்டும்.

திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அமராவதி குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க, கழிவுநீர் வெளியேற்றும் குழாய்கள் அடைக்கப்பட்டுள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட சபையார் குளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நில அளவீடு பணிகள் வருகிற 29-ந் தேதி நடைபெறும். கோதையாறு பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.


Next Story