ஆவடி பயிற்சி மையத்தில் பயங்கரம் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஆவடியில் விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சவுகான் நீரவ்குமார் (வயது 23). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். திருமணம் ஆகாத இவர், ஒரு வருட பயிற்சிக்கு பிறகு அதே இடத்தில் 'அசிஸ்டன்ட் ஏர் மேன்' ஆக பணியில் அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தின் மெயின் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த 'இன்சாஸ்' வகை துப்பாக்கியால் வலது பக்க தொண்டை பகுதியில் வைத்து திடீரென தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
பரிதாப சாவு
அதில், அவர் வைத்திருந்த துப்பாக்கியில் 20 குண்டுகள் இருந்துள்ளது. ஒருமுறை அழுத்தினால் 3 குண்டுகள் வெளிவரக்கூடிய பட்டனை அவர் அழுத்தியதால் ஒரே நேரத்தில் 3 குண்டுகள் அவரது தொண்டையை துளைத்து கொண்டு மண்டை வழியே வெளியேறியதில் மூளைச்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உரிழந்தார். துப்பாக்கியில் இருந்த குண்டுகள் வெளியேறிய வேகத்தில், அவர் இருந்த அறையின் சுவற்றில் அடித்து மேற்கூரை பகுதியில் துவாரங்கள் விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் மகேஷ், பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் மற்றும் முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
அப்போது இந்திய விமானப்படை வீரர்களும் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்ப பிரச்சினையா? என பல்வேறு கோணத்தில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பரிசோதனை செய்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விமானப்படை வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விமானப்படை வீரர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் அவர் சகோதரிக்கு கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், தனக்கு மனஅழுத்தம் அதிகம் இருப்பதால், அதன் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அதில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.