தனியார் கல்லூரி சேர்மன் வீட்டில் பயங்கர தீ; பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின..!


தனியார் கல்லூரி சேர்மன் வீட்டில் பயங்கர தீ; பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின..!
x

திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரி சேர்மன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

சென்னை

ஆவடி:

சென்னை, ஆவடி அடுத்த திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் 3-வது மெயின் ரோட்டில் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி சேர்மன் எம்.ஜி.பாஸ்கர் (வயது 64) என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் தரைத்தளத்தில் அவரது மகன் பிரபு பாஸ்கர் (39) என்பவர் வசிக்கிறார். இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் அவரது மகள் இந்துமதி (41) அவரது கணவர் சீனிவாசன் (47) மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு சீனிவாசனும் இந்துமதியும் வெளியே சென்றனர். அவர்களது பிள்ளைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது பூஜை அறையில் இருந்து திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூஜை அறையில் மரத்தாலான அறைகள் இருந்ததால் மரத்தில் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.




இதையடுத்து பதறிப்போன இரண்டு பிள்ளைகளும் கீழே இறங்கி சென்று பிரபு பாஸ்கரிடம் கூறியுள்ளனர். அவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மற்றும் திருவூர் பகுதியில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் தீயானது வீடு முழுவதும் பரவி, சமையலறையில் இருந்த சிலிண்டரில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதனால் மேலும் தீயானது படபடவென சத்தத்துடன் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதன் புகையானது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது.

அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்ல வேளையாக வீட்டில் யாரும் இல்லாததால் இந்த தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.




ஆயினும் வீட்டுக்குள் இருந்த சுமார் 5 லட்சம் மதிப்பிலான பீரோ, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர்கூலர், நாற்காலி, வீட்டின் ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவம் குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story