செங்கல்பட்டு அருகே பயங்கரம்: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 பேர் பலி


செங்கல்பட்டு அருகே பயங்கரம்: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 பேர் பலி
x

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதிய கோர விபத்தில் சாலையை கடக்க முயன்றபோது 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

வண்டலூர்,

சென்னை முதல் திருச்சி வரை ஜி.எஸ்.டி. சாலை இருக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை 45 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் மீனம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் செல்வதை பார்க்க முடியும். எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் இந்த சாலையில் நேற்று ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.

செங்கல்பட்டு சாலை வழியாக நேற்று காலை 9.15 மணியளவில் சென்னை நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு வந்த கனரக (டாரஸ்) லாரி பொத்தேரி ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. யாரும் எதிர்பாராத விதமாக சாலையின் நடுப்பகுதியில் சாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது பாய்ந்து பயங்கர சத்தத்துடன் மோதியது.

பயங்கர வேகத்தில் மோதியதால் டிரைவர், லாரியை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தும் பலன் இல்லை. இதில் சாலையில் நின்று கொண்டிருந்தவர்களையும், வாகன ஓட்டிகளையும் பதம் பார்த்தது.

சாலையை கடக்கஇருந்தவர்கள் மீது மோதியது

சீட்டுக்கட்டை சரிப்பது போல சாலையை கடக்க காத்திருந்த வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் கீழே முட்டித்தள்ளியது. சிறிதும் சுதாரித்துக் கொள்ள நேரம் இல்லாததால் அவர்கள் அனைவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது.

அதோடு மட்டுமல்லாமல், தறிகெட்டு ஓடிய லாரி சாலையின் நடுப்பகுதியில் இருந்த இரும்பு சிக்னல் கம்பையும், அதன் அருகில் இருந்த மரத்தையும் உடைத்து கொண்டு, லாரிக்கு அடியில் சிக்கியவர்களை தேய்த்தபடியே வந்த சாலையில் இருந்து பாதை மாறி எதிர் சாலைக்கு சென்றது. லாரி பயங்கரமாக மோதியதில் அதன் முன்பக்க டயரும் வெடித்ததாக சொல்லப்படுகிறது. எதிர்சாலையில் உடைந்த சிக்னல் கம்பு, மரக்கிளையுடன் அந்த வழியாக வந்த காரின் முன்பகுதியில் மோதியபடி நின்றது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. அசூர வேகத்தில் லாரி மோதிய விபத்தில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் என மொத்தம் 5 பேர் சிக்கிக் கொண்டனர்.

4 பேர் உடல் நசுங்கி பலி

இதில் பொத்தேரி பகுதியை சேர்ந்த பவானி (வயது 38), பெருங்களத்தூரை சேர்ந்த சைமன் (47), கல்லூரி மாணவர்கள் கார்த்திக் (23), ஜஸ்வந்த் (18) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்தில் பெருங்களத்தூரை சேர்ந்த பார்த்தசாரதி (52) என்பவர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் பவானியை தவிர, மற்ற அனைவரும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் மாணவர்கள் இருவரும் ஒரே வாகனத்திலும், சைமன் மற்றும் பார்த்தசாரதி தனி வாகனத்திலும் வந்துள்ளனர். லாரி மோதியதில் 3 மோட்டார் சைக்கிள்களும் சுக்கு நூறாக உடைந்து, அதன் பாகங்கள் நாலாபுறமும் சிதறிக் கிடந்தன. லாரியின் முன்பகுதி சிக்னல் கம்பி மற்றும் தடுப்பு கம்பிகளில் மோதியதில் ஒரு பக்கம் நெளிந்து போனது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்தசாரதியை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

சிக்னல் கம்பு, மரக்கிளையுடன் சாலையின் நடுப்பகுதியில் நின்றிருந்த லாரியை அகற்றுவதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் சிக்னல் கம்பம், மரக்கிளைகளை அகற்றியதோடு, லாரியையும் இழுத்து சாலையின் ஓரத்தில் கொண்டு நிறுத்தினார்கள்.

உடல் நசுங்கிய நிலையில் கிடந்த பவானி மற்றும் மாணவர் ஜஸ்வந்த், லாரியின் முன்சக்கரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சைமன், மாணவர் கார்த்திக் ஆகியோரின் உடல்களை எடுத்து பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்தம்பித்தது ஜி.எஸ்.டி. சாலை

லாரி மோதிய விபத்தால் சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி சாலையின் நடுப்பகுதியில் நின்றுவிட்டதால் அதனை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. கிரேன்கள் உதவியுடன் அகற்றப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை ஸ்தம்பித்து போனது.

மேலும் விபத்து நடந்த பகுதியில் முறையாக சிக்னல் செயல்படாதது, போக்குவரத்து போலீசார் அலட்சியமாக செயல்பட்டது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பொத்தேரி பகுதி மக்களும், விபத்தில் பலியான பவானி என்பவரின் உறவினர்களும் போராட்டத்தில் குதித்தனர். காலை 11.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

சிக்னல் கம்பங்கள் அவசியம்

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அந்த இடத்தில் நடந்து வருவதாக கூறும் அந்த பகுதி மக்கள், சிக்னல் கம்பங்கள் அமைக்கப்படாததுதான் இந்த விபத்துகளுக்கு மூலக்காரணம் என்றும், சிக்னல் கம்பங்கள் அமைக்க பல முறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story