சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழுவினர் ஆய்வு


சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழுவினர் ஆய்வு
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வளர்ச்சித்திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

பொதுக்கணக்குழுவினர் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் வினீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகாலையும், முருங்கபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திருப்பூர் பழைய பஸ் நிலைய பணிகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். கட்டுமான பணிகள் முழுவதும் முடித்து ஒப்படைக்கும் மாதம் குறித்து கேட்டனர். அதற்கு ஆகஸ்டு மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மூலமாக அவினாசி-திருப்பூர்-பல்லடம்-பொள்ளாச்சி-கொச்சின் சாலை அகலப்படுத்தும் பணிகளையும், பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மைய சேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பல்லடம் நகராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்தும், அய்யம்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை நிலையத்தையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திட்டப்பணிகள், தணிக்கை குறித்து அனைத்து துறை சார்ந்த மாவட்ட உயர் அதிகாரிகளுடன் மாலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, நகராட்சி நிர்வாகம், பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.

ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது:-

நாடாளுமன்றத்தின் அனைத்து குழுக்களுக்கும் தாய் போன்ற பொதுக்கணக்கு குழுவுக்கு நாட்டின் வளங்கள் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. இலவச திட்டங்களுக்கான செலவினம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநில அரசுகளும் தெளிவான காரணங்களுக்காக இலவசத்தை வழங்குகிறது.

குறைபாடுகள் ஆய்வு

செலவினங்களை கவனமாக கையாண்டால் தான் குறுகிய கால மற்றும் நீண்டகால வளர்ச்சியின் நோக்கங்கள் சம கவனத்தை பெறும். சமூக பொருளாதார நோக்கங்களுக்காக நாட்டின் வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய வேண்டும். செலவினங்கள் நீண்டகால வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறதா, சமூக பொருளாதார நோக்கங்களுக்காக நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்ற இரண்டு நோக்கங்களையும் சமநிலைப்படுத்துவது குறித்து விரிவாக பரிசீலிப்பது குறித்து ஆராய வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story