இப்போதைய அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதைபோல விரைவில் இந்நாள் அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறும் வாய்ப்பு வரலாம் என்று முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதைபோல விரைவில் இந்நாள் அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறும் வாய்ப்பு வரலாம் என்று முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பேட்டி
ராமநாதபுரத்தில் மத்திய இணை மந்திரி கபில் மோரேஸ்வர் பாட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு மானியத்தில் ஏராளமான நிதி வழங்கியுள்ளது. இந்த நிதியை 10 நாட்களுக்குள் மாநில அரசுகள் உரிய அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு 10 நாட்களுக்குள் நிதியை ஒதுக்கீடு செய்யாவிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் மாநில அரசு வட்டி கணக்கிட்டு அதையும் சேர்த்து உள்ளாட்சி களுக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதிகளை பல்வேறு மாநிலங்கள் அந்த திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுபோன்ற புகார் வந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அதுபோன்ற புகார் வரவில்லை.
ஒதுக்கீடு
அதேபோன்று ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது. தமிழகத்தின் ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விட்டது. ஆனால் அந்த நிதியை பெறுவதற்கான ஆவணங்களை முறை யாக சமர்ப்பிக்காததால் நிதியை விடுவிக்க முடியவில்லை. ஆவணங்கள் சமர்ப்பித்தால் அடுத்த நிமிடமே விடுவிக்கப் பட்ட அந்த நிதியை தமிழகம் பயன்படுத்தி கொள்ளமுடியும். இவ்வாறு கூறினார்.
போதை மயம்
இதனை தொடர்ந்து முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தற்போது போதை மயமாகிவிட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை என்று தமிழகம் கொலை பூமியாகிவிட்டது. தமிழகத்தை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் 2ஆக பிரிக்கப்படாது. பிரிக்ககூடாது என்பதுதான் பா.ஜ.க.வின் கொள்கை. தற்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறுவதுபோன்று இந்நாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடக்கலாம். அதற்கான வாய்ப்புகள் வரலாம்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை பிரிந்து நிற்கும் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நல்லது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலை ஆகி விடக்கூடாது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை சரியான முடிவை எடுத்து சரியான பாதையில் சென்றால் தான் நல்லது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி
தற்போதைய நிலையில் பா.ஜ.க. ரொம்ப தெளிவான நிலையுடன் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியுடன் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் எம்.பி.க்களை பெறுவது தான் பா.ஜ.க.வின் நோக்கம். நாட்டில் ஆண்டுக்கு 3 தேர்தல் நடைபெறுகிறது. இதனை தவிர்க்கவே நாடாளுமன்ற தேர்தலை போல சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.