பர்கூரில், ஜவுளி தொழில் மேம்படுத்தப்படுமா?


பர்கூரில், ஜவுளி தொழில் மேம்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

'குட்டி சூரத்' என்று அழைக்கப்படும் பர்கூரில் ஜவுளி தொழிலை மேலும் மேம்படுத்த போக்குவரத்து வசதியை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

'குட்டி சூரத்' என்று அழைக்கப்படும் பர்கூரில் ஜவுளி தொழிலை மேலும் மேம்படுத்த போக்குவரத்து வசதியை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

'குட்டி சூரத்'

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகரம் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. குட்டி சூரத் என்று அழைக்கப்படும் பர்கூர் ஜவுளி தொழிலுக்கு பெயர் பெற்ற நகரமாகும். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளன. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கான ஜவுளி ரகங்கள் இங்கு மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளன. 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஜவுளி இங்கு பிரதான தொழிலாக விளங்குகிறது. ஊருக்கு ஒன்று சிறப்பாக கூறுவதை போல பர்கூர் என்றால் ஜவுளி என்று சொன்னால் மிகையல்ல.

டெக்ஸ்டைல் மார்க்கெட்

அந்த அளவிற்கு ஜவுளிக்கு பெயர் பெற்ற பர்கூரில் துணிமணிகள் வாங்குவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மக்களும், கர்நாடகா, ஆந்திர மாநில மக்களும் தினமும் வந்து செல்கிறார்கள். கடந்த 1983-ம் ஆண்டு 67 பேர் ஒன்று சேர்ந்து பர்கூரில் டெக்ஸ்டைல் மார்க்கெட் ஒன்றை உருவாக்கினார்கள்.

அதன் பின்னர் பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் அத்திகானூர், பச்சூர், கண்ணன்டஅள்ளி உள்பட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட ஜவுளி மார்க்கெட்டுகள் வந்தன. தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் பர்கூரை சுற்றி உள்ளன.

போக்குவரத்து சீராக இல்லை

இந்தியாவில் ஜவுளிக்கு பெயர் போன சூரத், மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு நேரடியாக சென்று மொத்தமாக ஜவுளிகளை கொள்முதல் செய்து இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாகவும், சில்லறையாகவும் ஜவுளி வியாபாரம் இங்கு நடந்து வருகிறது. இத்தகைய பர்கூரில், ஜவுளி தொழில் பல வளர்ச்சியை கண்டிருந்தாலும், போக்குவரத்து சீராக இல்லாததால் இன்னும் மேம்பாடு அடையாத நிலையிலேயே உள்ளது. பர்கூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே, இங்கு வந்து ஜவுளிகளை வாங்கி செல்லும் சூழ்நிலை உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்தோ, திருப்பத்தூர், வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தோ ஜவுளி வாங்க வருபவர்கள் பர்கூர் வர முடியாத சூழலே உள்ளது. காரணம் ஒரு சில பஸ்களை தவிர பெரும்பாலான பஸ்கள் பர்கூர் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகிறது. இதனால் இப்படி ஒரு ஜவுளி கடைகளே இந்த பகுதியில் இருப்பதை மக்கள் அறியாமல் போய் விடுகிறது. இதனால் குட்டி சூரத் என்று அழைக்கப்படும் பர்கூரில் ஜவுளி தொழிலை மேலும் மேம்படுத்த போக்குவரத்து வசதியை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

புறநகர் பஸ் வசதி தேவை

பர்கூர் ஜவுளி வியாபாரி லோகேஸ்:-

பர்கூர் ஜவுளி தொழிலின் முக்கிய நகரமாக விளங்குகிறது. பல்வேறு மாவட்ட, மாநில மக்கள் வந்து செல்லும் பர்கூரில் ஜவுளி நிறுவனங்களுக்கு சரியாக போக்குவரத்து வசதிகள் இல்லை. அரசு புறநகர் பஸ்கள் எதுவும் இந்த பகுதியில் வருவதில்லை. அவ்வாறு பஸ்கள் இந்த பகுதியில் வந்து சென்றால் ஜவுளி தொழில் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். இதனால் பர்கூரில் ஜவுளி தொழிலை மேலும் மேம்படுத்த போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.

ஜவுளி வியாபாரி சுகுமார்:-

பர்கூரில் ஜவுளிகள் எடுக்க பொதுமக்கள் அதிகமாக வருகிறார்கள். காரணம் மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விலை குறைவு என்பதாகும். உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணமாக வெளியூர் மக்கள் அதிக அளவில் இங்குள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு வந்து செல்ல இயலவில்லை.எனவே இந்த பகுதியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். குறிப்பாக புறநகர் பஸ்கள் இங்கு வந்து செல்லவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story