தா.பழூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


தா.பழூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

தா.பழூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசுகையில், சிந்தாமணி கிராமத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூர் சாலை முதல் கீழக்காடு வரை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் செய்து தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எப்போது சாலை வசதி செய்து தரப்படும் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை. எனவே அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர், சாலை அமைப்பதற்கான பணி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியில் அவ்வளவு தொகையை செலவு செய்ய முடியாது. எனவே இதற்கான வேறு நிதி ஆதாரங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாலை அமைப்பதற்கான நிதி பெற்று சாலை அமைக்கும் பணி விரைந்து முடுக்கி விடப்படும் என்று தெரிவித்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினர். கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பாற்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) குருநாதன் நன்றி கூறினார்.


Next Story