நீலகிரி மாவட்டத்தில்முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நீலகிரி மாவட்டத்தில்முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழா
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவு கூறும் பொருட்டு 108 படிக்கட்டுகள் உள்ளன. மேலும் மலேசியாவில் உள்ளதைப் போன்று 40 அடி உயர முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் காலை 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச திருவிழா நடந்தது. காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பரிகார தெய்வங்கள், மூலவர், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 40 அடி உயர முருகன் சிலையை வழிபாடு செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
சுவாமி வீதி உலா
இதை தொடர்ந்து தோரோட்டம் 11.50 மணிக்கு தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். தேரோட்டமானது பாம்பே கேசில், ஊட்டி, சாமுண்டி, ஏ.டி.சி., மணிக்கூண்டு, லோயர் பஜார், மெயின் பஜார் வழியாக மாரியம்மன் கோவில் பகுதியில் முடிந்து மீண்டும் கோவிலை சென்று அடைந்தது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும், தடுப்பு நடவடிக்கையாகவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் பூசாரிகள், நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். மேலும் தேரோட்டமும் நடைபெற வில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல் தேரோட்டம் நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் தைப்பூசத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேரோட்டத்தையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவில்
இதேபோல் வண்டிச்சோலை பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் காலை 11 மணிக்கு பால், பன்னீர் உள்பட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
லோயர் பஜார் சுப்பிரமணியர் கோவில், தாலுகா அலுவலகம் அருகில் பாலமுருகன், மிஷ்னரி ஹில் பகுதியில் உள்ள பாலமுருகன், வெலிங்டன் சுப்பிரமணியர் கோவில், அன்னைமலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. மேலும் பல்வேறு இடங்களிலும் அன்னதானம் நடைபெற்றது.
கோத்தகிரி சக்திமலை முருகன்
கோத்தகிரி சக்திமலை பகுதியில் பிரசித்தி பெற்றதும், பழமை வாய்ந்ததுமான வெற்றிவேல் முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தைப்பூசத் திருநாளையொட்டி ஆண்டுதோறும் திருக்கல்யாணம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு, தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் இழுத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன் தினம் காலை 6 மணிக்கு அஷ்டபலி சிறப்பு பூஜையும், 10.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், 12.30 மணிக்கு முருகப் பெருமானுக்கு வள்ளி தெய்வானை சகிதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 5 மணிக்கு மகா ஹோமம், 7 மணிக்கு அபிஷேகம், 9 மணிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. காலை 11 மணி முதல் கோத்தகிரி சாய் குமார் மற்றும் பகவத் சைதன்யா குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
வடம் பிடித்த பக்தர்கள்
மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகக் கடவுள் வீற்றிருந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோவிலை 3 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மாலை 6.10 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்று விழா நிறைவடைந்தது. இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை மவுனபூஜை நடைபெறுகிறது.
இதேபோல் தைப்பூசத்தையொட்டி கோத்தகிரி அருகே உள்ள காத்துகுளி, நட்டக்கல், தேன்மலை, பர்ன்சைடு முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேர் வடம் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.