தாளவாடி குன்னன்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்புகளை புறக்கணித்த மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்
ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்
தாளவாடி குன்னன்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்.
வகுப்புகள் புறக்கணிப்பு
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள குன்னன்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 143 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் 8 மாணவ-மாணவிகள் மட்டும் உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கியுள்ளனர். இவர்கள் 8 பேர் மட்டுமே நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தனர். பனஹள்ளி, பாளையம், ஜீரஹள்ளி, எரணஹள்ளி, சிங்கன்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 135 மாணவ-மாணவிகள் வரவில்லை. அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
இதுபற்றி அறிந்ததும் வட்டார கல்வி அலுவலர் பாக்கியரதி பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது அங்கிருந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பெற்றோர்கள் அதிகாரியிடம் கூறும்போது, 'பள்ளிக்கூடத்தில் 143 மாணவ-மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே கல்வி கற்பிக்கின்றனர். தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராக முடியாமல் மாணவர்கள் எதிர்காலம் கேள்விகுறியாகும்.
இதனால் மாணவ-மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்படும். 2 வகுப்பறைகளில் 143 பேரையும் அமர வைத்தும், பல நேரங்களில் மரத்தடியில் அமர வைத்தும் பாடம் நடத்துகிறார்கள். மேலும் 68 மாணவிகளுக்கு ஒரேயொரு கழிப்பிடம் மட்டும் உள்ளது. இதனால் மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
ஆதரவு
அதற்கு அதிகாரி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கூறும்போது, 'விரைவில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். எனவே மாணவ-மாணவிகளை நாளை (அதாவது இன்று) முதல் பள்ளிக்கூடத்துக்கு வருமாறு அறிவுறுத்துங்கள்' என்றார்.
மாணவ-மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் பள்ளிக்கூட வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நேற்று முழுவதும் பள்ளிக்கூடத்தில் வகுப்புகளும் நடக்கவில்லை.