தாளவாடி, கோபியில்பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
தாளவாடி, கோபியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனா்.
தாளவாடி அருகே உள்ள கரளவாடி பகுதியில் தாளவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் போலீசாருடன் ரோந்து சென்றார். அப்போது ரோட்டோரத்தில் 8 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். ஆனாலும் அதில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மல்லன்குழி கிராமத்தை சேர்ந்த சிவபாதா (வயது 30), கரளவாடியை சேர்ந்த சுப்பிரமணி (50), மகேஷ் (50), கர்நாடகா மாநிலம் பிசில்வாடியை சேர்ந்த மகேஷ் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 620-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் கோபி அருகே உள்ள அளுக்குளி கொள்ளுமேட்டு காலனியில் பணம் வைத்து சூதாடுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த அளுக்குளியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 25), சம்பத் (39), துரைசாமி (45), பகவதி (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சூதாட பயன்படுத்திய ரூ.1,190-ம் பறிமுதல் செய்யப்பட்டது.