காட்டு யானைகள் அட்டகாசம்
அமராவதி பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.
வனவிலங்குகள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி விடுவதுடன் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் நீர்வரத்தை இழந்து விடுகிறது.
இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.அதைத் தொடர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பசி தாகத்தோடு அடிவாரப் பகுதியை நோக்கி வந்து விடுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
யானைகள் அட்டகாசம்
இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு தண்ணீர் பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அடிவாரப் பகுதியில் முகாமிட்டு வருகிறது. அப்போது யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
அந்த வகையில் உடுமலை அடுத்துள்ள அமராவதி நகரில் தோட்டத்து சாளை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்தது. அப்போது அங்குள்ள மின்மோட்டார்கள், கம்பி வேலிகள் மற்றும் கோழிப் பண்ணையின் பக்கவாட்டுச் சுவரையும் சேதப்படுத்திது.
விவசாயிகள் அச்சம்
கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளதால் இரவு நேரத்தில் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். அத்துடன் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையில் தோட்டத்து சாலை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உள்ளே புகுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றது.