கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி


கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி
x
திருப்பூர்


ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

புலிகள் காப்பக பகுதி

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது.

இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது. இந்த பணி வருகின்ற 29-ந்தேதிவரை தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.

34 சுற்றுகளில் கணக்கெடுப்பு

உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம் வந்தரவு வனச்சகரங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டு உள்ளது. வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அப்போது முதல் 3 நாட்களில் சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட உள்ளது.

அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட உள்ளது. அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவரவகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது. இறுதி நாளான 29-ந்தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

சரக வாரியாக பயிற்சி

இதற்கான பயிற்சி நேற்று உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் நடைபெற்றது. அப்போது உயிரியலாளர் மகேஷ் குமார் வனத்துறையினருக்கு சரக வாரியாக பயிற்சி அளித்தார். அதைத்தொடர்ந்து புலிகள் கணக்கெடுப்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் வனப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story