ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?


ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?
x
திருப்பூர்

மலைக்கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுமா என்று மலைவாழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

போராட்டம் நிறைந்த வாழ்க்கை

மலைவாழ் கிராமங்களில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் எந்த ஒரு உதவி சேவையை பெற முடிவதில்லை. இதன் காரணமாக அடிப்படை கல்வியை கூட பெற முடியாத சூழலே நிலவுகிறது. இதனால் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியும் போராட்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து அடுத்த தலைமுறை வளர்ச்சியை கூட பூர்த்தி செய்ய முடியாமல் இறந்துவிடும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு முழுமையாக நிறைவேற்றி தராத அடிப்படை வசதிகளில் சுகாதாரமும் அடங்கும். மலைவாழ் குடியிருப்புகளில் இயற்கை முறையில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை எங்களது குழந்தைகள் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயத் தொழில் முற்றிலுமாக முடங்கி விட்டது.

அதைத் தொடர்ந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சமதள பரப்புக்கு வந்து உணவுப்பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வந்தோம்.ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடுகளில் விளைந்த அந்தப் பொருட்களால் இயற்கை முறை பிரசவம் மலைவாழ் கிராமத்தில் எட்டாக்கனியாக மாறி விட்டது.

அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு முதல் பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றோம். குழந்தை பிறப்பு நெருங்கும் வேளையில் அடர்ந்த வனப்பகுதியில் பயணித்து சமதளப் பரப்பை அடைந்து அவசர கதியில் வாகனங்களை பிடித்து ஆஸ்பத்திரிக்கு செல்வதற்குள் தாய்க்கும் சேய்க்கும் சிக்கல்கள் ஏற்பட்டு விடுகிறது.

நடவடிக்கை

ஆனால் அடிப்படை ஆதாரமாக உள்ள பிறப்புச் சான்றிதழ் குழந்தைக்கு கிடைத்து விடுவதால் கல்வி உள்ளிட்ட ஒரு சில தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது. எனவே உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதியில் அருகருகே உள்ள மலைவாழ் கிராமங்களை ஒன்றிணைத்து அதன் அடிவாரப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பிரசவம், விபத்து, இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு விரைந்து சிகிச்சை மேற்கொள்ள இயலும் விலைமதிப்பற்ற உயிரையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story