தீபாவளியை கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் தாம்பரம், பெருங்களத்தூர் சாலை வெறிச்சோடின
தீபாவளியை கொண்டாட ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் தாம்பரம், பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தாம்பரம்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்னையில் வசிக்கும் பல லட்சம் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் சிறப்பு பஸ்கள், கார்களில் ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
ஆனால் லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் இருந்து வெளியூர் சென்றுவிட்டதால் நேற்று காலை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து வெறிச்சோடின.
3-வது நாளாக நேற்றும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டபோதும் தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்டது. பெரும்பாலான சிறப்பு பஸ்களும் காலியாகவே சென்றது.