எடப்பாடி பழனிசாமியுடன், தமிமுன் அன்சாரி சந்திப்பு
சேலத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி சந்தித்தார். அப்போது பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியது துணிச்சலான முடிவு என அவர் கூறினார்.
சேலம்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேற்று சந்தித்து பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் தமிமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் கைதிகளை சாதி, மத பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து வருகிற 9-ந்தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம். அண்ணா பிறந்தநாளன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வந்தோம். தமிழக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இது பெரிய ஏமாற்றம்.
துணிச்சலான முடிவு
பா.ஜனதாவில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது, தமிழகத்திற்கு நல்ல செய்தி. துணிச்சலாக இந்த முடிவு எடுத்ததற்கு தமிழக மக்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. எங்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.
அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கூறினோம். ஆனால் தி.மு.க. அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு சமூகத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.