தஞ்சை ரெயில் நிலையத்தில் தலையாட்டி பொம்மை கண்காட்சி
தஞ்சை ரெயில் நிலையத்தில் தலையாட்டி பொம்மை கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:-
தஞ்சை ரெயில் நிலையத்தில் தலையாட்டி பொம்மை கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தலையாட்டி பொம்மை கண்காட்சி
தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கு தஞ்சை ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விற்பனை அரங்கம்
புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய இந்திய ரெயில்வே அமைச்சகம் முக்கிய ரெயில் நிலையங்களில் "ஒரு ரெயில் நிலையம்-ஒரு உற்பத்தி பொருள்" என்ற தலைப்பின்கீழ் கடைகள் அமைத்திட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள "தஞ்சை தலையாட்டி பொம்மைகள்" விற்பனை செய்ய தஞ்சை ரெயில் நிலையத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை அரங்கில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஊராட்சியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தலையாட்டி பொம்மைகள், நடமாடும் பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள் உள்ளிட்ட பல வகையான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தெற்கு ரெயில்வே கோட்ட உதவி வணிக மேலாளர் சந்திரசேகர், தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.