கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் உள்பட பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து நடத்த கோரிக்கை விடுத்தனர்.
தர்ணா
குடிமங்கலம் ஒன்றியம் வாகைத்தொழுவு ஊராட்சி தலைவர் சுதா தலைமையில் வ.வேலூர் சலவநாயக்கன்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தின் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 70 ஆண்டுகளுக்கு முன் மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறோம். 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒற்றுமையாக திருவிழா நடத்தி வருகிறோம். தற்போது எங்கள் பகுதியை சேர்ந்த சிலர், ஊரின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் கோவில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வந்தனர்.
திருவிழா
இதைத்தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ.விடம் நாங்கள் புகார் தெரிவித்து திருவிழாவை ஒற்றுமையாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டோம். 10 நாட்களுக்குள் இரு தரப்பினரிடம் பேசி முடிவு செய்வதாக ஆர்.டி.ஓ. தெரிவித்தார். குடிமங்கலம் போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒரு தரப்பினர் நேற்று (நேற்று முன்தினம்) இரவு மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருவிழா நடத்த பூச்சாட்டை தொடங்கியுள்ளனர். ஊர் மக்களிடம் முறையாக தெரிவிக்கவில்லை. ஆர்.டி.ஓ.விசாரணை நடக்கும்போது இவ்வாறு செய்துள்ளனர். ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்து முறையிட்டனர்.