ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை


ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை
x
திருப்பூர்


தாராபுரம் உழவர் சந்தை அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி தலைவரிடம் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

உழவர் சந்தை

தாராபுரம் அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் தினசரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவித்த தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய் உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளை விற்பனை செய்வது வருவது வழக்கம். ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலையோரங்களில் காய்கறி கடைகளை போடுவதால் இவர்களின் வியாபாரம் பாதித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாநில செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமையில் உழவர் சந்தை விவசாயிகள் பலர் தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணனிடம் மனு கொடுத்தனர். பின்னர் ஆணையாளர் ராமரிடமும் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

நடவடிக்கை

அதன் பிறகு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது :-

தாராபுரம் உழவர் சந்தைக்கு வரும் வழியில் உள்ள அனைத்து சாலைகளின் ஓரமாக காய்கறி கடைகளையும், தனியார் கட்டிடங்களில் உழவர் சந்தை நடக்கும் நேரத்தில் காய்கறி கடைகளையும் நடத்தி உழவர்களின் வாழ்வாதாரத்தை இடைத்தரகர்களும், வியாபாரிகளும் பறித்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சந்தைக்கு உழவர்கள் கொண்டுவரும் காய்கறிகளை விற்க இயலாமல், உழவர்கள் மீண்டும் இடைத்தரகர்களிடமே விற்கவேண்டிய அவலநிலை நிலவிவருகிறது. எனவே உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story