இந்துக்கள் தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் இந்து முன்னணியினர் கோரிக்கை மனு
இந்துக்கள் தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் இந்து முன்னணியினர் கோரிக்கை மனு வழங்கினர்.
இந்துக்கள் தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் இந்து அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்துக்குமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயகூத்தன், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ராகவேந்திரா ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அமைதிப்பூங்காவாக திகழ்ந்த தூத்துக்குடியின் அமைதியை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்களுக்கும், அவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆலை மூடப்பட்டதால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வருபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மீரான்குளம் பஞ்சாயத்து தலைவர் சிவபெருமாள் தலைமையில் சிலர் கொடுத்த மனுவில், மீரான்குளம் பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரி வருவாய் மூலம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். பொதுமக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் சிலர் கல்குவாரியை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர். எனவே தொடர்ந்து கல்குவாரி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கல்வி மேலாண்மை குழு
காயல் சமூகநீதி பேரவை செயலாளர் அகமது சாகிபு தலைமையில் பேரவையினர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கல்வி இடைநிற்றலை தவிர்த்து மாணவர்கள் கல்வியை தொடரும் வகையில், மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும், கல்வி மேலாண்மை குழு அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளும் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவேற்றிய 40 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.