12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வேண்டும்


12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வேண்டும்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு உயர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு உயர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முப்பெரும் விழா

தமிழ்நாடு உயர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் இணைந்து கூடலூர் செவிடிப்பேட்டை ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டிடத்தில் முப்பெரும் விழாவை நடத்தியது. விழாவுக்கு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ரவி, இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

வட்டார தலைவர் சந்திரகுமார் வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், வட்டார பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் மாயவன், மாநில தலைவர் பக்தவச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர் கோவை மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

திரும்ப பெற வேண்டும்

இதில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவராக ரவி, செயலாளராக அன்பழகன், பொருளாளராக விஜயகுமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து கூடலூர் தாலுகா தலைவராக விமலா, செயலாளராக அஜயன், பொருளாளராக சந்திரகுமார் ஆகியோரும், பந்தலூர் தாலுகா தலைவராக ஸ்டீபன், செயலாளராக மணி வாசகம், பொருளாளராக ரகுபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மலையாள வழி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ள 12 மணி நேர வேலை மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சலீம், சஜி, கருணாநிதி, சிவபெருமாள், தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story