திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷ பாட்டிலுடன் வந்த அக்காள்-தங்கையால் பரபரப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷ பாட்டிலுடன் வந்த அக்காள்-தங்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு விஷ பாட்டிலுடன் வந்த அக்காள்-தங்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் இன்று நடந்தது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கையில் பையுடன் 2 பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். நுழைவு வாயில் அருகே வந்ததும் தாங்கள் வைத்திருந்த பையில் இருந்த விஷ பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றனர்.
இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று பெண்கள் விஷத்தை குடிப்பதற்கு முன்பு பாட்டிலை தட்டிவிட்டனர். பின்னர் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பழனி சண்முகபுரத்தை சேர்ந்த நாகரத்தினம் (வயது 42), ஆர்.எப்.ரோட்டை சேர்ந்த முத்துமாணிக்கம் (40) என்பதும், இருவரும் சகோதரிகள் என்பதும் தெரியவந்தது.
சொத்தை மீட்டு தர வேண்டும்
மேலும் அவர்களுக்கு சேர வேண்டிய சொத்தை சகோதரர் கடந்த 10 ஆண்டுகளாக பிரித்து கொடுக்காமல் இருக்கிறார். எனவே சகோதரரிடம் இருந்து சொத்தை மீட்டு தரவேண்டும். அது கிடைக்கவில்லையென்றால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. இதனால் தான், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தற்கொலைக்கு முயன்றோம் என்றனர்.
இதையடுத்து அந்த பெண்களை எச்சரித்த போலீசார், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அக்காள்-தங்கை விஷ பாட்டிலுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.