விருத்தாசலத்தில் 4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்


விருத்தாசலத்தில் 4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
x

விருத்தாசலத்தில் 4-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள், மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள் வீடுகளை அகற்றுவதற்காக விருத்தாசலம் வருவாய்த்துறையினர் அளவீடு செய்துள்ளனர்.

இதில் பகுதிவாரியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4-வது கட்டமாக கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, தாசில்தார் தனபதி முன்னிலையில் தொடங்கியது.

மாற்று இடம்

பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. முன்னதாக விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் காரணமாக, கடலூர் சாலையில் நேற்று போக்குவரத்து இயக்காமல், மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

இதற்கிடையே இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் விருத்தாசலம் தாசில்தார் தனபதியை சந்தித்து, வீடுகளை இழந்து தவிக்கும் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்.


Next Story